அரசியல்
Now Reading
கருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் ராஜதந்திரிதான்
0

கருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் ராஜதந்திரிதான்

by editor sigappunadaJuly 1, 2016

தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சு, கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது. தேர்தலுக்கு வெகு நாட்களுக்கு முன்பாகவே, பாமக தனித்துப் போட்டி அறிவிக்க தமிழகத்தில் மும்முனைப் போட்டி உறுதியானது.

அடுத்து, மக்கள் நலக் கூட்டணி அமைந்ததும் ஓ! நான்குமுனைப் போட்டியா?’ என்று, அப்போதே வாய்பிளக்கத் தொடங்கினர் வாக்காளர்கள். ஆனால், தொடக்கத்தில் தள்ளாடிய ம.ந.கூ ட்டணி, தேமுதிக- தமாகா -ம.ந.கூட்டணி என்று ஆகி  நிமிர்ந்து நின்றது.

jayalalithaa

அப்புறம், பாஜக, ஐதேக போன்ற கட்சிகளைச் சேர்த்து அதுவும் கூட்டணி அமைத்து, தமிழக அரசியலில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஐந்துமுனைப் போட்டிக்கு வித்திட்டது.

அப்படியும் தமிழக வாக்காளர்களையும், ஜெயலலிதாவையும் நிம்மதியாக இருக்கவிடவில்லை இந்தக் கட்சிகள். சீமான் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என மளமளவென வேட்பாளர்களை அறிவித்தார்.  அவ்வளவுதான் மூச்சுத் திணறியது வாக்காளர்களுக்கு.

வெற்றி பெறமாட்டோம் என்பது உறுதியாகத் தெரிந்தாலும், கூட்டணியில் இடம் கிடைக்காத உதிரிகள், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்தனர். அது ஏழாவது கூட்டணி.

அத்துடனும் தமிழக வாக்காளர்களை சும்மா விடவில்லை தமிழக அரசியல் கட்சிகள். நாங்களும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம் என்று  எஸ்.டி.பி.ஐ. அறிவித்தது. எட்டுமுனைப் போட்டியாயிற்று. மேலும் கண்ணுக்குத் தெரியாத  பிஸ்பி, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன.

இவற்றையெல்லாம் பார்த்து வாக்காளார்கள் குழம்பி விடவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால். இவ்வளவு கட்சிகள் கூட்டணி அமைந்ததால் வாக்காளர்கள் தெளிவாகி, திமுக, அதிமுகவை தவிர்த்து மற்றவர்களை நிராகரித்து விட்டார்கள்.

இந்த  அளவிற்கு அதிகமான கட்சிகள் கூட்டணி  அமைத்து தமிழக தேர்தலில் போட்டியிட்டதற்கு ஜெயலலிதாவின் ராஜதந்திரம் தான் காரணம். இந்தத் தேர்தலுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில், ஏன்? இந்தியாவிலேயே மிகப் பெரிய ராஜதந்திரி என்றால் அது கருணாநிதிதான் என்று  கூறப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து போட்டியிட முடியாமல் போனதும், தனித்துப் போட்டி என்ற ரிஸ்க் எடுக்க தயங்கியதன் மூலம், அந்தப் பிம்பம் சற்று உடைந்தது. தேர்தல் முடிவுகள் கருணாநிதி ராஜதந்திரி என்ற பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டது.

IMG_5934

இதன் மூலம் ஜெயலிதாதான் கருணாநிதியை விட சிறந்த ராஜதந்திரி என்பதை தெளிவாக காட்டிவிட்டது.

சரி, அதிக கூட்டணி அமைந்ததற்கு ஜெ. எப்படி காரணம்? என்று பார்ப்போம்.

2014 மக்களவைத் தேர்தலில் யாரையும் கேட்காமல் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். காங்கிரசுக்கு எதிரான அலை, மோடிக்கு ஆதரவான அலை போன்ற பல காரணங்களை தகர்த்துத் தனித்து நின்ற அதிமுக 37 எம்.பி.களை டில்லி கோட்டைக்கு அனுப்பி வைத்தது.

தனது இரண்டாண்டு ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்   அது என்று  நினைத்தார் ஜெ. அதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாக இருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் எதற்கும் அடுத்தத் தேர்தல் கூட்டணியில் இடமில்லை என்பதைத் தெளிவாக்கினார்.

அதேபோன்று 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம்தான் போட்டியிட வேண்டும் என்பதில்  ஜெயலலிதா உறுதியாக இருந்ததால், மக்கள் நலக் கூட்டணி உறுதியானது. இதை, ஜெயலலிதாவின் ராஜதந்திரம் என்றுதான் கூற வேண்டும்.  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்பாத உதிரிகட்சிகளைப் புறம்தள்ளினார் ஜெ. அதே சமயம் தனக்கு எதிராக வலுவான கூட்டணி அமையாமல் பலமுனைப் போட்டியை உருவாக்கினார் ஜெ.

ஜெயலலிதா தனது அரசின் சாதனைகளைச் சொல்லித்தான் வாக்கு கேட்க முடிகிறது. திமுக-வைத் தவிர, வேறு எந்தக் கூட்டணியையும் ஜெ.பொருட்படுத்தவேயில்லை. ஆனாலும் அத்தனைக் கட்சிகளும் ஆளும் கட்சி என்றமுறையில் அதிமுக-வை வறுத்து எடுத்தன.

இவை எல்லாவற்றையும்  தனக்கு சாதகமாக்கினார் ஜெயலலிதா. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் மட்டுமே பிரிந்தன. அதுவும் ஜெ.வின் திட்டப்படி பலமுனைப் போட்டியில் சிதறின. அதனால் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா. முப்பத்து இரண்டு வருடங்களாக இருந்த வரலாற்றை மாற்றி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.

ஜெயலலிதாவின் ராஜதந்திரம் வென்றது. கருணாநிதியின் ‘ராஜதந்திரி’ என்ற பார்வை உடைந்து போனது.

அடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு இப்போதே பல வியூகங்களை வகுத்து வருகிறார் ஜெயலலிதா.

மீண்டும் தனித்துப் போட்டி என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜெ., ஆர்ப்பாட்டமில்லாமல் அதை செயல்படுத்தவும் உத்தேசித்துள்ளார்.

உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்கள், அதிக வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் என ஒரு லிஸ்ட்டை ரெடி பண்ணச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் ஜெ.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கையில் மக்களை, குறிப்பாக பெண்களை அதிகம் கவர்ந்த விஷயம் எது? இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா என்ற இரண்டையும்  தவிர்த்து, மக்களை அதிகம் கவர்ந்தது, சென்றடைந்த அதிமுக அரசின் நலத்திட்டங்கள், தாலிக்குத் தங்கம், ஆடு, மாடு போன்ற நலத்திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் லிஸ்ட் போன்றவற்றை எடுக்கவும் உத்தவிட்டுள்ளாராம்.

அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் ஒவ்வொரு வார்டுக்கும் குறைந்தது ஐந்நூறு குடும்பங்களுக்கு நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்க சம்மந்தபட்ட துறைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளாராம் ஜெ.

அதேபோல நலத்திட்டங்கள் கொண்டு சேர்க்கப்பட்ட குடும்பங்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்  அப்படியே பெற கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்துள்ளதாம்.  உண்மையாக உழைத்து வெற்றித் தேடி தருபவர்களுக்கு  உரிய பதவி காத்திருக்கிறது என்ற அறிவிப்பும் அதில் உண்டு. அதனால் ரத்தத்தின் ரத்தங்கள் சுறுசுறுப்பாக ஜெ. உத்தரவுக்கு உழைத்து வருகிறார்களாம்.

அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி என்ற இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார் ஜெ. அவரது ராஜ்தந்திரம் சட்டமன்ற தேர்தலில் கைகொடுத்தது போல உள்ளாட்சித் தேர்தலிலும் கைகொடுக்கிறதா பார்ப்போம்.

                          -ஆர்.ஜி.எஸ்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response