ஸ்பெஷல்
Now Reading
சுயநலத்திற்காக எதிர்கும் திமுக – கட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்
0

சுயநலத்திற்காக எதிர்கும் திமுக – கட்சிகளிடையே புகைச்சலான குளச்சல்

by editor sigappunadaJuly 1, 2016

எந்தத் திட்டம் வருவதாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லையென்றால் , அது ஆச்சர்யம்தான். அதற்கென்று ஒரு அமைப்பு உருவாகி அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி அதற்கு முட்டுக்கட்டை போடுவது வழக்கமாகி விட்டது. இதற்கு சமீபத்திய உதாரணம் கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எழுந்த எதிர்ப்பை நாடே அறியும்.

1

அதேபோன்று தற்போது குளச்சல் துறைமுகத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். மீனவர் சங்கங்கள் மட்டுமல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களும்தான். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  இந்தத் திட்டத்திற்காக கடும் முயற்சி எடுத்திருக்கிறார்.  இந்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியதும், ‘ இந்த திட்டத்தை நிறைவேற்ற, அமைச்சர் பதவியையும் துாக்கி எறியத் தயார்’ என, சவால் விட்டு பேசியுள்ளார்.
பதவியையே தூக்கி எறியத் தயார் என்று கூறக் காரணம் என்ன?
‘கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள இணயத்தில் வர்த்தக துறைமுகத்தை ஏற்படுத்தி, தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவேன்’ என, 2014 லோக்சபா தேர்தலின் போது, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார். வெற்றி பெற்றதும், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சரானார். இதையடுத்து, வாக்குறுதியை செயல் படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

pon radha

பொன்.ராதாகிருஷ்ணன்

இதற்காக, பிரதமர் மோடி வரை தனிப்பட்ட முறையில் பேசி, குளச்சல் துறைமுக திட்டத்துக்கு ஒப்புதல் வாங்கினார். ஆனால், குளச்சல் பகுதி மீனவர்களிடம் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. உடனே, திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுடன் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் துவங்கப்பட்ட பிறகு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுக- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதன் பிறகு பிரச்னை வேறு திசையில் சென்றது
குளச்சல், கிள்ளியூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், விளவங்கோடு, பத்மநாபபுரம் என, ஆறு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., – காங்., கூட்டணியைச் சேர்ந்தவர்கள். ஆறு பேரும் கூட்டாக, சேர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானை சந்தித்து, குளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்கள் என்ன சொல்கிறார்கள்.? பார்ப்போம்.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்., – எம்.எல்..,வான விஜயதாரணி, “  மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. மீனவர்கள் கேட்பது  மீன்பிடி துறைமுகம், ஆனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அங்கே வர்த்தக துறைமுகத்தை அமைக்க முயற்சிக்கிறார். தனிப்பட்ட முறையில் பலன் பெறுவதற்காக, அவர் இதைச் செய்கிறார்.

vijaya-tharaniகுளச்சலில் துறைமுகம் அமைக்கப்படும் என்று சொல்லிவிட்டு, தற்போது அத்திட்டத்தை இணயத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். எதற்காக, குளச்சலில் இருந்து திட்டத்தை மாற்றினர் என, யாருக்கும் தெரியாது.

மாவட்ட எம்.எல்.ஏ.,வாக இருக்கும் எனக்கு கூட மாற்றப்பட்டது குறித்து தெரிவிக்கவில்லை. இந்தத் திட்டம் பற்றியும் முழுமையாக தெரியவில்லை. எனவே திட்டம் குறித்து, மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரிடமும், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பேச வேண்டும். என்ன நடக்கப் போகிறது என்பதை எங்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்; பின்னர், மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

அதன்பின்பு தான், திட்டத்தைத் துவங்க வேண்டும். இல்லையென்றால், திட்டத்தை செயல்படுத்துவது சிரமம். மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு, மாநில அரசு அவசரப்பட்டு எந்த ஒத்துழைப்பும் தரக்கூடாது. மக்கள் நலனுக்காக, நாங்கள் இப்படிப்பட்ட முயற்சியி ஈடுபட்டிருப்பதை, மத்திய அமைச்சர், அரசியல் சாயம்பூசி, அதனால் எழும் மக்களின் எதிர்ப்பை எங்கள் பக்கம் திருப்பிவிடலாம் என கனவு காண்கிறார்; அது நடக்காது, நடக்கவிட மாட்டோம்.” என்று கூறினார்.

குளச்சல் தொகுதி காங்., – எம்.எல்..வாக இருக்கும் பிரின்ஸ் இது குறித்து பேசுகையில்  “ குளச்சல் பகுதியில் ஏற்கனவே உள்ள மேற்குக் கடற்கரை சாலை, கன்னியாகுமரி – களியக்காவிளை சாலை, ஆரல்வாய்மொழி – நெடுமாங்காடு சாலை உள்ளிட்ட சாலைகளை மேம்படுத்தி, புதிய வர்த்தக துறைமுகத்துக்கு பயன்படுத்தப் போவதாக தெரிகிறது.

பிரின்ஸ்

பிரின்ஸ்

ஏற்கனவே இருக்கும் சாலைகளை மேம்படுத்துகிறேன் என்றுகூறி, பொதுமக்களிடம் உள்ள நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். இதனால், பல ஆயிரம் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாழ்படுத்த, ஒரு திட்டம் கொண்டு வரும் போது சும்மா இருக்க முடியுமா?” என்று கூறினார்.

 

 

இதேபோன்று நாகர்கோவில் தொகுதி தி.மு.., – எம்.எல்.., சுரேஷ்ராஜனும், “
அதே நேரம், மாவட்டத்தின் தலையாய பிரச்னையாக உள்ள குளச்சல் – இணயம் வர்த்தக துறைமுகம் குறித்து, ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளோம். அந்தத் திட்டத்தை மாற்றி, மீன்பிடி துறைமுகமாக அமைக்க வலியுறுத்துகிறோம். மற்றபடி, திட்டத்தை முடக்குவது என்பது எங்கள் நோக்கமல்ல.” என்று கூறினார்.

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார்

எதிர்ப்புக்கு காரணமாக கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார், “ மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கடலோரப் பகுதி தான் இணயம். அந்தப் பகுதியில் தான் தற்போது, வர்த்தக துறை
முகத்தை அமைக்க உள்ளனர்.கேரளா மாநிலம், விழிஞ்ஞம் பகுதி மிக அருகில் தான் உள்ளது. அங்கும் தனியார் பங்களிப்பில், வர்த்தக துறைமுகம் அமையவுள்ள சூழலில், அதன் பக்கத்தில் உள்ள குளச்சலிலும், ஒரு வர்த்தக துறைமுகம் தேவையில்லை; லாபகரமாகவும் இயங்காது.இணயம்து றைமுகம் மூலம் பெரியளவில் வேலைவாய்ப்பு இருக்காது.” என்று கூறினார்.

விழிஞ்சம்

விழிஞ்சம்

“ குளச்சல் பகுதியில் திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம் என்றதும், ‘அங்கு மக்கள் அடர்த்தியாக வாழ்கின்றனர். அதனால், பாதிப்பு ஏற்படும்’ என, கூறியதால்தான் திட்டம், இணயம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.” என்று பாஜகவின் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

அதேபோன்று, “இந்த திட்டத்துக்காக, ஒரு துண்டு நிலத்தை கூட மீனவ மக்களிடம் இருந்து எடுக்கப் போவதில்லை. கடல் பகுதியில் தான் நிலம் எடுக்கப்படும்; ஆழப்படுத்தப்படும். இதனால், மீனவர்கள் துளியும் பாதிக்கப்பட மாட்டார்கள். கட்டாயமாக வேலைவாய்ப்பு பெருகும். சரக்கு போக்கு வரத்து மூலம் மத்திய – மாநில அரசுகளுக்கும் வருமானம் பெருகும்.” என்று இந்தத் திட்டத்தை ஆதரிப்போர் கூறிவருகின்றனர்.

திமுக- காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று தமிழக பாஜவினர் காரணம் கூறுவதை பாருங்கள், “ இந்தத் திட்டத்துக்கு காரணமான பா.ஜ.,வுக்கு பெயர் கிடைத்துவிடும். பாஜகவுக்கு பெயர் கிடைக்க கூடாது என்பதற்காகவே தி.மு.க., – காங்கிரஸ்  எம்.எல். ஏ.,க்கள்,  ‘மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ எனச் சொல்லி, திட்டத்தை திசைதிருப்பி தடை போட நினைக்கின்றனர்..
இந்தப் பகுதியில், ‘டுனா’ என்ற சிறப்பு வகை மீன்  அதிக அளவில் கிடைக்கிறது. அதன் விலை அதிகம்; கிராக்கியும் அதிகம். கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலில் தி.மு.க.,வினரே அதிகமாக ஈடுபட்டிருக்கின்றனர். இந்த வகை மீன் பிடித்து, உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து  பெரியளவில் லாபம் பார்த்து வருகின்றனர்.

இணயம் பகுதியில் வர்த்தக துறைமுகம் வந்துவிட்டால், லாபம் பார்ப்பது தடைபடும் என்பதற்காகவே திமுகவினர் மக்கள் பெயரைச் சொல்லி எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அதற்கு காங்கிரஸாரும் துணைநின்று ஒத்து ஊதுகின்றனர்” என்று காரணங்களை புட்டு புட்டுவைக்கின்றனர்.

திட்டத்தால், பா.ஜ.,வுக்கு பெயர் கிடைத்து விடக் கூடாது  என்பதில்  கிறிஸ்தவ பாதிரியார்களும் அதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று பாஜகவினர் குண்டைத் தூக்கிப் போடுகின்றனர்.

இதுகுறித்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,“ தமிழகத்தில், பா.ஜ., சார்பில் நான் மட்டுமே எம்.பி.,யாகி உள்ளேன். இருப்பினும், என்னை, கப்பல் துறை இணை அமைச்சர் ஆக்கியுள்ளார். பிரதமர் மோடி. இந்த பொறுப்பு மூலமாக, தமிழக மக்களுக்கு என்னாலான அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்று பாடுபட்டு வருகிறேன்.

அந்த வகையில், தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக கருதப்படும், குளச்சல் – இணயத்தில், வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும் என பாடுபட்டு, அதற்கான முன் முயற்சிகளை எடுத்தேன். மத்திய அரசு தரப்பிலும் முழு ஆர்வம் காட்டப்பட, கனவு திட்டம் நிறைவேறும் நிலைக்கு வந்துள்ளது.

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என, தி.மு.க., – காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்தத் திட்டத்தால் யாருக்கும் பாதிப்பு  ஏற்படுவது இல்லை. தென் மாவட்ட வளர்ச்சிக்கு இது காரணமாக  அமையும்.” என்று கூறினார்.

மேலும் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் விருப்பமாகும் என்றும் தெரிவித்தார்.

                                          -எம்.நல்லதம்பி

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response