க்ரைம்
Now Reading
புதுவகைப் போதை அதில் சிக்கி சீரழியும் சிறுவர்கள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
0

புதுவகைப் போதை அதில் சிக்கி சீரழியும் சிறுவர்கள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

by editor sigappunadaJuly 1, 2016

மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்என்று சொன்னால், “போங்க சார்! எங்க லெவலே வேற என்று கூறும் அளவிற்கு போதையிலும் புதுப்புது யுக்தியை கண்டுபிடித்து போதையேற்றி வருகிறார்கள். இதில் வேதனையான விஷயம் இப்போது நாம் பார்க்கப்போகும் புதுவிதமான போதை என்பது படிக்கின்ற மாணவர்களிடம் நடமாடுகின்றது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

o

கஞ்சா உள்நாட்டு போதை, அபின். பிரவுன் சுகர் போன்றவை உலக அளவிலான போதை. இவையெல்லாம் ரொம்ப காஸ்ட்லி. ஆனால் சீப் ரேட்டில் கிடைக்கிறது லோக்கல் போதை. அது என்னவென்று கேட்கிறீர்களா?

 நெஞ்சை உலுக்கும் அந்த போதை விஷயம் குறித்து அலசி ஆராய களத்தில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகம் இது குறித்து  விவரமறிந்த சிலர் நம்மிடம், “ இப்போதெல்லாம் பசங்க பள்ளிக்குடத்திற்குப் படிக்கவா போறாங்க?. புதுசு புதுசா ஏதாவது  கெட்ட விஷயத்தை கற்றுக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை காசாக்க நினைக்கும் சமூக விரோத கும்பல். புது ஐட்டங்களை கண்டுபிடித்து மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறதுஅப்படி வந்ததுதான் பேஸ்ட் போதை. பள்ளி மாணவர்களிடம் கேட்டுப்பாருங்கள், “பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர், பெவி குவிக்’ என, எந்தெந்த பொருட்களில் போதை  எவ்வளவு இருக்கிறது என, “கிறக்கத்துடன்’ கூறுவார்கள்”. என்று கூறுகிறார் மதுரையை சேர்ந்த காளி என்பவர்.

o 1

சென்னை மைலாப்பூர், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இதுபோன்ற பேஸ்ட் போதை பிரபலம். பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள ஸ்டேஷனரி கடைகளில் இதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது அந்தக் கடைக்காரர்களுக்கும் நன்றாக தெரியும். வருமானம் என்பதால்  அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. அதை சாதகமாக்கிகொண்டு அதிக விலைவைத்து விற்பதும் உண்டு.

“ சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் சில மாணவர்கள் பள்ளியில் போதையில் இருப்பது பிரச்னையாகி, அது மது போதை என்று நினைத்து மாணவர்களை கண்டித்ததும், பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நடந்தது. ஆனால் ஒரு மாணவன் போதையில் தள்ளாடியபடி கிழே விழுந்து மூக்கு அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது இந்தப் பேஸ்ட் போதை விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதேபோல பழநி கோயிலுக்கு ஆயிரக்கணக்கானவரகள் வந்துபோகும் இடத்தில் திருட்டு போவது அடிக்கடி நடப்பது உண்டு.

alcohol

ஒருமுறை திருட்டு சம்பவத்தின்போது திருடியவர்கள் கையும் களவுமாக பிடிபட அதிர்ச்சியாகி விட்டது. காரணம் சிக்கியவர்கள் சிறுவர்கள், அவர்கள் பேஸ்ட் போதையில் இருந்திருக்கிறார்கள். இது நடந்தது கடந்த வருடம். கடந்த ஏப்ரல் மாதம் மீனம்பாக்கம் அருகே ஒரு பள்ளிக்குத் தேர்வு எழுத ஒரு மாணவன் செல்லவில்ல என்ற தகவல் பெற்றோருக்குக் கிடைக்க, தேடியிருக்கிறார்கள். ரயில்வே பிளாட்பாரம் அருகே போதையில் கிடந்த அவனிடம் விசாரித்தபோது அவன் பேஸ்ட் போதையைப் பயன்படுத்தியது தெரிய வந்திருக்கிறது.

இதேபோன்ற இன்னொரு சம்பவம்  மைலாபூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் நடந்ததுள்ளது. அதை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்.” என்று வரிசையாக அதிர்ச்சி சம்பவங்களை அடுக்கினார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.

இதுபோன்ற போதை பழக்கத்திற்கு 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள்  அதிக அளவில் அடிமையாகி சிக்கிக் சீரழிந்து வருகின்றனர் என்பது வேதனையான உண்மை.

பள்ளி மாணவர்கள் சிலரிடம் விசாரித்தபோது புட்டு புட்டுவைத்தார்கள் விவரமாக. சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன். அவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால் இந்தப் போதைக்கு அடிமையாகியிருக்கிறான்.

உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட பயன்படுவது சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். பெவிகுவிக் இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக இருந்தாலும்  அவர்களை மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக இருக்கிறது.

எப்படி போதையாகிறது? என்றுதானே கேட்கிறீர்கள்? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின் பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. “இதுதான் எங்களுக்குப் போதை’ என்று கூறுகிறான் அந்த மாணவன்.

pa1

மேலும் அந்த மாணவன் “ கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள் மூலம், இரு மாதங்களுக்கு முன்பு, இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும் “பாக்கெட் மணியை’ பொறுத்து, 13 ரூபாய், 20 ரூபாய்,34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்தப் பேஸ்ட்டை கடைகளில் வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும் ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும் இருக்கிறது” என்று சர்வ சாதாரணமாக கூறுகிறான்.

கடைகளில் டைப்பிங் எழுத்தை அழிக்க இரு பாட்டில்கள் கொண்ட ஒயிட்னர் பாக்கெட் விற்கப்படுகிறது.
இதில் ஒரு பாட்டில் ஒயிட்னர் முழுமையையும் குடித்து போதை ஏற்றிக் கொள்வோரும் உள்ளனர். யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாத பொருளா இது இருக்கிறது, பசங்களுக்கு வசதியா இது இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பாட்டில்களில் வருகிற ஒயிட்னர் தடை செய்யப்பட்டு, பேனா வடிவிலான ஒயிட்னர்கள் புழக்கத்தில் இருக்கிறது. நம்மூரில் தடையின்றி எல்லாம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

சைக்கிள் பஞ்சர் ஒட்டப் பயன்படும் சொலியூசன், ஒயிட்னர் போன்றவற்றை கைக்குட்டையில் ஊற்றி மூக்கில் உறிஞ்சி நாள் முழுவதும் போதையில் கிரக்கத்துடன் இருக்கிறார்கள் சிறுவர்கள்.
ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு விற்பனையாகும் போதை தரும் பேஸ்ட் ஐட்டங்கள், தற்போது  ஒரு நாளைக்கு மட்டுமே 50  வரை விற்பனையாகிறது. இந்தப் பேஸ்ட் ஐட்டங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள கடைகளில்தான் அதிக விற்பனை என்பது கொசுறு தகவல்.

500ML

போலீசாருக்கு இந்தப் போதை விவகாரம் நன்றாகத் தெரியும். ஆனாலும் தடுக்க நினைப்பதில்லை. இது குறித்து போலீசார் தரப்பில் விசாரித்தபோது,  “ சார். இதுக்கெல்லாம் சட்டத்தில் இடமில்லை. எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது?.  கடைக்காரனை கேட்டால் பேஸ்ட் எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று எங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேட்கிறார்கள். நீங்கள் சொல்லும், பேஸ்ட் அயிட்டங்கள் எதுவுமே போதை அயிட்டம் லிஸ்ட்டில் வரவில்லை. பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளைக் கண்கானித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். தவிர கடைக்காரர்களும் சமூக அக்கறையோடு நடந்து கொள்ளவேண்டும்” என்று கைகழுவிய பதிலை கூறி நழுவி விடுகின்றனர்.

இப்போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மூளை நரம்பியல்  டாக்டர் ஒருவர் கூறுகையில், ” போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள் பாதிப்படைகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும். போதைக்கு அடிமையானால் மன அழுத்தம் அதிகரித்து விடும்.  போதை பழக்கம் உடலை பாதிப்பதோடு உள்ளத்தையும் பாதிக்கிறது.உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிடும். மேலும் மஞ்சள் காமாலை, புற்றுநோய், டிபி, எச்ஐவி, வயிற்று புண் என்று பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தலை முதல் கால்வரை, தோல் முதல் எலும்பு வரை அனைத்துப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மொத்தத்தில் போதை பழக்கம் புதை மண்ணில் கால்வைப் பது போல் சுகமாக இருந் தாலும், அதிலிருந்து மீளமுடியாமலே போய்விடும்” என்று   எச்சரிக்கின்றார்.

டாக்டரின் மருந்து சீட் இருந்தால் மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள் கேட்டால் மட்டுமே இந்தப் பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தரவேண்டும். அதேசமயம், பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம் உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறை அச்சத்தையும், நீதிபோதனை கல்வியையும் சிறு பருவம் முதலே போதிக்க வேண்டும்.

                      –ஆர்.ஜி.எஸ்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response