அரசியல்
Now Reading
வசூல் செய்த பணம் எங்கே? -கேள்வி கேட்கும் கட்சியினர்
0

வசூல் செய்த பணம் எங்கே? -கேள்வி கேட்கும் கட்சியினர்

by editor sigappunadaJuly 1, 2016

தேமுதிக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் சந்தித்தது இப்போது பெரும் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. இப்போது கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள பிரச்னையால் வந்த வேதனையைவிட, சட்டமன்றத் தோல்வியால் வந்த வேதனை பரவாயில்லை என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் விஜயகாந்த்.

தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆளாளுக்கு காய்ச்சி எடுத்து வருகிறார்கள். ஏன்டா கட்சியை ஆரம்பித்தோம் என்ற மனநிலைக்கே வந்துவிட்டார். அதற்குள் மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கடிதங்கள்  அனுப்பியிருப்பதாக தகவல்வர மேலும் டென்ஷனில் இருக்கிறார் விஜயகாந்த்.

vijayakanth

அப்படி என்னதான் இருக்கிறது அந்த கடிதங்களில்,

“ நீங்கள் சினிமாவில் பேசிய வசனங்களை பார்த்துதான் ரசிகர்கள் ஆனோம். ‘கேப்டன்’ என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால், தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

2006 தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அதில் 34 வேட்பாளராவது கட்சியில் தற்போது இருக்கிறார்களா? 2009இல் 40 பேர் எம்.பி. தொகுதியில் தனித்து போட்டியிட்டோம். அதில் நான்கு வேட்பாளராவது தற்போது கட்சியில் இருக்கிறார்களா?

2005இல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்டத் தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்டச் செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தேமுதிக என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேமுதிக மாநாடு நடத்துங்கள்; நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால், மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்துக்கும் மாநாடு நடத்தியதற்கான பணம் கொடுக்கவில்லை. உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்டஈடாக ரூபாய் 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால்  கடந்த 10 வருடங்களாக திமுக-வையும், அதிமுக-வையும் நாங்களும் எதிர்த்தோம். 2016இல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக திமுக-வோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள். ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்துவிட்டீர்கள். 2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸ்ட் உள்ளது.

vijaykanth7

தேமுதிக டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகிற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும்தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்குத் தெரியும். கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒருநாள் யாராவது ஒரு மாவட்டச் செயலாளரையாவது அழைத்து செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறீர்களா?

தேமுதிக கட்சி தொடங்கி யாருக்கும் லாபமில்லை. ஆனால், உங்கள் குடும்பத்தினருக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது. உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் குடும்பத்தினருக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீர்களே இது நியாயமா?” என்று நீள்கிறது அந்தக் கடிதம்.

“இந்த கடிதங்கள் உண்மையில்லை, அப்படி கடிதங்கள் தலைமைக்கு வரவில்லை” என்கிறது தேமுதிக தலைமை.

கடிதங்கள் வந்தது உண்மை, சில மாவட்டச் செயலாளர்கள் பெயரில் வந்ததும் உண்மை. ஆனால் அந்த சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களிடம் தேமுதிக தலைமை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘அப்படியொரு கடிதம் நாங்கள் யாரும் எழுதவில்லை’ என்று பதில் கூறியிருக்கிறார்கள்.

ஆக, கடிதமே சர்சையில் சிக்கியிருக்கிறது. சரி, அந்த 500 கோடி என்னாச்சு கேப்டன்?

  -ராகவ்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
100%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response