க்ரைம்
Now Reading
செயின் பறிப்பா? உயிர் பறிப்பா? வெளியே வர அஞ்சும் சென்னை மக்கள்
0

செயின் பறிப்பா? உயிர் பறிப்பா? வெளியே வர அஞ்சும் சென்னை மக்கள்

by editor sigappunadaJuly 6, 2016

சுவாதி கொலையின் அதிர்ச்சியிலிருந்து மீளாத சென்னை மக்களுக்கு மேலும் ஒரு அதிர்சியை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் ஒழிக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத குற்றமாக தற்போது தலையெடுத்து வருவது செயின் பறிப்பு சம்பவங்கள்தான். செயின் பறிப்பின் போது போராடி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒரு ஆசிரியை செயின் பறிப்பு சம்பவத்தால் உயிரிழந்துள்ளார்.

நந்தினி

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு, பெயின்டர். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் நந்தினி, வயது 24. எம்.எஸ்சி பட்டதாரியான நந்தினி, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த திங்கள்கிழமை இரவு நந்தினி தனது சம்பள பணத்தை அருகிலுள்ள ஏடிஎமில் எடுக்க தனது அத்தை மகளான நஜ்ஜு என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

மந்தைவெளியில் உள்ள ஏடிஎம் ஒன்றில்.25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை நந்தினி ஓட்டி வந்திருக்கிறார்.

அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் பைக்கில் இவர்களை பின்தொடர்ந்து வந்து பணம் எடுத்ததை கவனித்திருக்கிறார். அவர்களை பிந்தொடர்ந்த அந்த மர்ம நபர்கள் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நந்தினி திரும்பியபோது, நஜ்ஜூ கையில் மாட்டியிருந்த கைப்பையை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த நந்தினி, வாகனத்தை வேகமாக ஓட்டினார். விரட்டிச் சென்ற மர்ம நபர் பட்டினப்பாக்கம் பணிமனை அருகே நஜ்ஜூவிடம் இருந்து கைப்பையை பறித்துக்கொண்டு வேகமாக சென்றார்.

நந்தினியும், நஜ்ஜுவும் ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டிச் சென்றனர். ஆத்திரமடைந்த கொள்ளையன், நந்தினி யின் வாகனத்தை காலால் உதைத்து தள்ளியுள்ளார்.  இதனால் நிலை தடுமாறி அருகில் நின்றுகொண்டிருந்த சேகர் என்பவர் மீது நந்தினியின் வாகனம் மோதியது. மோதிய வேகத்தில்   நெடுஞ்சாலைத்துறையினர் நட்டுவைத்திருந்த கல்லில் மோதி நந்தினியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நந்தினியும் சேகரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

நஜ்ஜூ படுகாயத்துடன் மயங்கிக் கிடந்தார். நந்தினியின் வாகனத்தை உதைத்து தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றபோது, கொள்ளையனும் பைக்கில் இருந்து தடுமாறி விழுந்தான்.

இதை பார்த்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். தப்பிக்க முயன்ற கொள்ளையனை சுற்றிவளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவருடைய பைக்கை தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு  உடனடியாக வந்த பட்டினப்பாக்கம் போலீஸார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தினி, சேகர், நஜ்ஜூ ஆகியோரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையனையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நந்தினி இறந்தார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சேகரும், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த செய்தி பரவியதும் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவியது. முகத்தில் காயங்களுடன், நஜ்ஜூ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பிடிபட்ட கொள்ளையன் செங்குன்றம் செங்காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணாகரன்,வயது 32, என்பது தெரியவந்தது. குடிபோதையில் இருந்த கருணா, ஏடிஎம்மில் நந்தினி பணம் எடுத்ததை கவனித்துள்ளார். அவர்களை பின்தொடர்ந்து சென்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான். கருணாகரனுடன் சேர்ந்து வந்த இன்னொருவன் தலைமறைவாகிவிட்டான் என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

கருணாகரன்

ஆனால் போலீஸ் அதிகாரிகள், “முதலில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது 2 பேர் என்றுதான் தகவல் வந்தது. தற்போது ஒருவர்தான் வழிப்பறியில் ஈடுபட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

வழிப்பறி முயற்சியின்போது பைக் மோதியதில் இறந்த  சாகருக்கு வயது 65. பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி வயது 55. குழந்தை இல்லை. தினமும் இரவில் சாப்பிட்டுவிட்டு கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அன்றைக்கு இரவும்  சாப்பிட்டு முடித்ததும் நடைப்பயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றார். அப்போதுதான் பைக் மோதியதில் சாகர் இறந்துள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியாகும். இந்த சம்பவத்துக்கு பிறகு அருகிலுள்ள டாஸ்மாக் கடையால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் புகார் வாசிக்கின்றனர். இந்தச் சம்பவத்திற்கு பிறகு அப்பகுதி பதற்றமாக இருந்தது. போலீஸாரும் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த தகவல் கிடைத்த அரை மணிநேரத்தில் போலீசார் விரைந்து வந்திருக்கின்றனர். சுவாதி கொலைக்கு பிறகு போலீசார் கொஞ்சம் உஷாராகவே இருக்கின்றனர் என்று கூறும் அப்பகுதி மக்கள், ஆனால் தொகுதி எம்.எல்.ஏ நட்ராஜ் சம்பவ இடத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை வராதது குறித்து வருத்தம் தெரிவிக்கின்றனர் போலீஸ் துறையில் முக்கிய பதவியில் இருந்தவர். தனது அனுபவத்தின் மூலம் அங்கு அப்போது நிலவிய சூழ்நிலையில் மக்களிடம் பேசி பதற்றத்தை தணித்திருக்கலாம்.

இதுகுறித்து ஆர்.நடராஜ், ‘இந்த சம்பவம் தொடர்பாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆசிரியை நந்தினி கொலை தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று கழுவிய மீனில் நழுவிய மீனாக பதில் கூறியுள்ளார்.

செயின் பறிப்பு சம்பவம் உயிர்பறிப்பு சம்பவங்களாக மாறி சென்னை மக்களை பயமுறுத்துகிறது. இதனால் சென்னை மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர். இதனை தீர்க்க போலீசார் இன்னும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

-ஆர்.ஜி.எஸ்.சுதாகர்

இதையும் படிச்சிருங்க !
chinese-fire-crackers-17806242 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 19-ந்தேதி தொடக்கம்!! - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை கண்காட்சி வருகிற 19-ந்தேதி மாலை தொடங்குகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
100%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response